மாவு மிஷினும் மோபியஸ் பட்டையும்

2009 செப்டம்பர் 3

சிறுவயதில் கமர்கட்டோ, இலந்தைவடையோ கையூட்டாக பெற்று, அம்மாவிற்காக பக்கத்து கடைவரை சென்று மாவு அரைத்து வந்ததுண்டா? மாவுமெஷின் கடையில் மோட்டாரிலிருந்து மாவரைக்கும் ஜகடையை இணைக்கும் கன்வேயர் பெல்ட்டை பார்த்திருக்கிறீர்களா? என்றால், நான் இங்கு எழுதப்போகும் வஸ்துவுடன் உங்களுக்கு பரிச்சயம் இருக்கும்.

இதுவரை இவ்வகை வீடுபேற்றில் திளைத்தெழுந்ததில்லையெனில், வீட்டிற்கருகே மாவுமெஷின்கடை இருந்தால் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து தொடர்ந்து படியுங்கள். அதற்கும் முடியாமல் வீட்டைச்சுற்றி பொட்டல் காடாய் புலம்பெயர்ந்திருப்பவர்களுக்கு, இடம், பொருள், ஏவல், தவிடு சூழ நான் குறிப்பிடும் மாவுமெஷின், அருகில் படத்தில் காட்டியுள்ளதுபோல இருக்கும்.


ricemill

சரி, விஷயத்திற்கு வருவோம். படத்தில் ஒரு விநோதம் கவனித்தீர்களா; மோட்டார் ஷாஃப்டையும் அரைக்கும் ஜகடையையும் கோர்த்து இணைக்கும் பெல்ட் பட்டை நேராக இல்லாமல், நடுவில் ஒரு முறுகலோடு (மடக்கி, மாற்றிப்போட்டு) இருக்கிறது. மோட்டார் இயங்குகையிலும் பெல்ட் இவ்வாறே பயணிக்கும். எதற்காக இப்படி?

விடை உங்களில் மெஷின் அருகில் சென்று கவனித்த சிலருக்கு தெரிந்ததுதான். முறுகலில்லாமல் (மடக்கி போடாமல்) பெல்ட்டை நேராக அணிவித்தால், தொடர்ந்து சுற்றுவதினால் ஏற்படும் மோட்டார்-பெல்ட் இடையேயான உராய்வு பெல்டின் ஒரு (கீழ்) பகுதியிலேயே இயங்கும். அங்கு பெல்ட் சீக்கிரம் தேய்ந்துவிடும். தேய்ந்த கீழ்பரப்பு மேலே வருமாறு பிறகு மாற்றிப்போடவேண்டும். ஒரு முறுகலோடு அணிவித்தால், விந்தையாக, உராய்வு பெல்டின் மேல், கீழ் பரப்பு அனைத்திலும் பகிரப்படும். மாற்றிப்போடத்தேவையின்றி நீடித்து உழைக்கும். ஏனெனில், (ஒரு பாதி) முறுகலோடு இருக்கும் பெல்ட்டிற்கு, மேல், கீழ் என தனியாக பக்கம் பிரிக்கமுடியாது. மேல்தான் கீழ்; கீழ்தான் மேல். மாற்றிச்சொன்னால், உட்புறம்தான் வெளிப்புறம்; வெளிப்புறம்தான் உட்புறம். மங்காத்தா வார்த்தைகளில் உள்ளே(தான்) வெளியே.

இவ்வாறு, (பட்டையின் தடிமனை கணக்கில் கொள்ளாமல்) இருபரிமாணத்தில் உள்ளே-வெளியே வித்தியாசமற்று இருக்கும் பட்டை ஒரு கணித விந்தை பொருள். பெயர், மோபியஸ் பட்டை.

இவ்வகை பட்டையின் தனித்தன்மைகளை கண்டுணர்ந்த கணிதவியலாளர் மோபியஸ்(1790-1868). இடவியல் (டோப்பாலஜி), வரைகோலவியல் (கிராஃப் தியரி) என்று சென்ற இரு கட்டுரைகளிலும் பரப்புகள் அவற்றின் குணங்கள் பற்றியும் அலசினோம். இடவியல் வார்த்தைகளில் சொன்னால் மோபியஸ் பட்டை ஓர்பரப்பு பொருள்.

மேலேசெல்லும்முன் பட்டையை வீட்டிலேயே செய்துபார்த்துவிடலாம். அக்கம் பக்கம் குழந்தைகளையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். தாய்மார்கள் வாழ்த்துவர்.

அருகில் படத்தில் உள்ளபடி பேப்பரில் நீளமான இரண்டு துண்டுகளை வெட்டிக்கொள்ளுங்கள். அகலமும் சற்று தாராளமாக இருக்கட்டும். இரண்டு பக்கமும் (மேல்-கீழ், அல்லது உள்-வெளி புறம்) அடையாளம் தெரிய வேறு நிறங்களில் ஓரமாக புள்ளிவைத்துக்கொள்ளுங்கள் (படத்தில் பிங்க் மற்றும் பச்சை புள்ளிகள்).

mobius1

ஒரு பட்டையை மடக்கி, ஓரத்தில் அதே நிறப் புள்ளிகள் சேர்ந்துவருமாறு ஒட்டுங்கள். வெளிவரும் பொருள் ஓரு துண்டிக்கப்பட்ட, சிறிய உருளையாக இருக்கும்.

mobius3

மற்றொரு காகிதப்பட்டையை ஒரு அரைச்சுற்று மடக்கி இரு முனைகளையும் ஒட்டுங்கள். இப்படி செய்கையில் வேற்றுநிறப்புள்ளிகள் இருக்கும் ஓரங்களை சேர்த்திருப்பீர்கள். வெளிவரும் பொருள் உருளை இல்லை. இதுதான் மோபியஸ் பட்டை.

mobius2

உருளைக்கு உள்ளே, வெளியே என இரண்டு பரப்பை சரியாக பிரித்துப் பார்க்கமுடியும். மோபியஸ் பட்டைக்கு ஒரே பக்கம்தான். வேண்டுமானால் பென்சிலைவைத்து ஒர் இடத்தில் தொடங்கி பட்டையை சுற்றி கோடு போட்டுக்கொண்டே வந்து, தொடங்கிய இடத்தில் சேருங்கள். விஷயம் விளங்கும். மோபியஸ் பட்டையின் ஒருபுறத்தை மட்டும் பெயிண்ட் அடிக்க காசு வாங்கி ஏமாறாதீர்கள்.

அதேபோல் ஒரு மோபியஸ் பட்டையை இரண்டாக்கித்தருகிறேன் என்றும் (அருகில் இருக்கும் குழந்தைகளிடம்) ரீல் விடாதீர்கள். ஏன் முடியாது என்று பரிசோதிப்போம். கையில் உள்ள உருளையின் குறுக்கே கத்தரிகொண்டு வெட்டுங்கள். வெட்டு தொடங்கிய இடத்திற்கே வந்தவுடன், முதல் உருளையைவிட அகலத்தில் இளைத்த இரண்டு உருளைகள் கிடைக்கும், இல்லையா.

mobius4

இதேபோல் மோபியஸ் பட்டையை குறுக்கே வெட்டுங்கள். கிடைப்பது இளைத்த இரண்டு… இல்லை, இல்லை, இளைத்த ஒரு, ஆனால் முன்னைக்காட்டிலும் பெரிய, மோபியஸ் பட்டை. கவனித்தால், இந்த பெரிய மோபியஸ் பட்டையில் இரண்டு முறுக்கு இருக்கும்.

mobius7

நீண்டு இருக்கும் இந்த மோபியஸ் பட்டையிலும் குறுக்காக இன்னொருமுறை வெட்டலாம். இவ்வாறு வெட்டிக் கிடைக்கும் வெட்டியான பொருள்… அனுமானிக்கமுடியாதது. இரண்டு 8 எண்ணை குறுக்காக சேர்த்ததுபோல இப்படி இருக்கும் (படத்தில் ஒரு 8 படுக்கைவாட்டிலும், மற்றொன்று நீட்டவாக்கிலும் இருக்கிறது).

mobius8

மோபியஸ் பட்டையை வைத்து பல எளிய சோதனைகள் இவ்வகையில் செய்யலாம். நம் கத்தரி குடலாபரேஷனை இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம். இப்போது ஒரு பழைய மிஸ்டர் எக்ஸ் ஜோக் சொல்வோம்.

மிஸ்டர் எக்ஸை எப்பொழுதும் ஆபீஸில் பிஸியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? சுலபம். அவரிடம் ஒரு வெற்றுத் தாளில் இரண்டு பக்கத்திலும் ஓரத்தில் PTO என்று எழுதிக் கொடுத்துவிட வேண்டும்.

அடிக்க வருமுன் ஒரு விஷயம் கவனியுங்கள். ஜோக்கின் புத்திசாலித்தன சாராம்சம் மோபியஸ் பட்டையின் ஒரு குணம். அதாவது, சிம்பிளாக முடிவற்ற செயலை செய்வது.

மோபியஸ் பட்டையில் பயணம் முடிவில்லாதது. ஒரு எறும்பை பிடித்து அந்தரத்தில் தொங்கும் மோபியஸ் பட்டையின் மீது விட்டால் அதன் மிச்ச ‘வாழ்க்கை பயணம்’ உத்தேசமாக பட்டையிலேயே முடிந்துவிடலாம். முடிவற்றதை குணத்தில் கொண்டுள்ளதால் மிகப்பெரிய முடிவற்ற எண்ணிக்கை, அனந்தம், இன்ஃபினிட்டி, என்பதற்கு எட்டை படுக்கவைத்தார்போல எழுதுவோமே, அதுவும் ஒரு மோபியஸ் பட்டைதான் என்றும் கூறுவர். கணித விந்தை பொருள்களையும், விஷயங்களையும் அனாயாசமாக தன் ஓவியங்களில் இருத்தி விளையாடியவர் மாரிஸ் எஷர். இவரின் ஒரு ஓவியத்தில் எறும்புகளுக்கு மோபியஸ் பட்டையில் அனந்தமான பயணம் விதிக்கப்பட்டுள்ளது.

escher

இடவியல், கணிதவியல் கடந்து இப்பட்டையினால் என்ன பயன்? நம்ம ரேஞ்சுக்கு, நாய்க்கு கட்டமுடியுமா என்றால், முடியும். முறுகலினால் கழுத்து வலிக்கும். மலையாள பகவதி மந்திரித்து கொடுத்தது என்று மோதிர வளையத்திற்கு பதில் விரலில் சிறியதாய் போட்டு அழகு பார்க்கலாம். தவறில்லை. கணிதவியலாளர்கள் இருக்கும் வீட்டில் திருஷ்டிக்காக வாசலில் குதிரை லாடத்திற்கு பதில் கட்டித் தொங்கவிடலாம். என்ன என்று கேட்பவர்கள் ஞானமடைவார்கள். பள்ளியில், தண்டவாள துண்டிற்கு பதிலாக உலோக மோபியஸ் பட்டையில் மணியடிக்கலாம். ஏதோ மிகைக்காக இப்படி காதில் மோபியஸ் பூ சுற்றுகிறேன் என்று எண்ண வேண்டாம். இதே ரீதியில் மெக்கானிக்கல் பிரெய்ன் உடையவர்கள் சிறியதாய் மோபியஸ் கியர் செய்துபார்த்து உவகித்துள்ளனர்.

mobiusgears500

(இங்கும் பார்க்கவும், மோபியஸ் கியர் எப்படி செய்வது என்று குறிப்புரை உள்ளது)

சமீபத்தில், மோதிரம் சைசில் இருக்கும் ஒரு மோபியஸ் பட்டையை ஆளுயர பக்கெட் தண்ணீரில் போட்டு, அது எப்படி உருண்டு பிரண்டு விழுகிறது என்று படம் பிடித்து, ஏன் அப்படி என்று தர்க்கித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளனர். சாதாரண வளையம் நீரை எதிர்த்து (புவியீர்ப்பினால்) விழுகையில், சமமாக எதிர்உராய்வுவிசை அதன் புரங்களில் இயங்கும். மோபியஸ் பட்டை முறுகலுடன் இருப்பதால், விசை பல கோணங்களில் இயங்கி, பட்டையை விழுகையில் சுருட்டி, நிச்சயம் கரணம் அடிக்கச்செய்யும். படத்தில் உள்ளதுபோல.

1b

அறிவியலில் மேலும் பல துறைகளில் நேரடியாக இந்த விந்தை பொருளை உபயோகிக்க முயன்றுள்ளனர். பல படிமங்களில் உதாரணங்கள் உள்ளது. மேலும் ஒன்றிரண்டு மட்டும் சுருக்கிவரைகிறேன்.

நிகோலாய் டெஸ்லா மோபியஸ் பட்டை உருவில் ஒரு எலக்ட்ரிகல் ரெஸிஸ்டர் செய்வதற்கு அடிகோலினார். இரண்டு மின்கடத்திகளை நடுவில் இன்சுலேட்டர் வைத்து இணத்து மோபியஸ் பட்டையாய் முறுக்கிய இவ்வகை ரெஸிஸ்டரில் மின்சாரம் செல்வதினால் ஏற்படும் செல்ஃப் இன்டெக்டன்ஸ் எனப்படும் சுய எதிர் மின்காந்தவிசை மிச்சம் இருக்காது. தற்போது பேடன்ட் இருக்கிறது. எங்கு உபயோகமாகிறது என்று தெரியவில்லை. மேலும் இதைப்பற்றி படிக்க இந்த சுட்டியை தொடருங்கள்.

சூரிய புயல்காற்று பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். புரோட்டான், எலக்ட்ரான் முதலிய மின்துகள்களினால் (சார்ஜ்டு பார்டிகிள்ஸ்) ஆன பிளாஸ்மா பொருள். தொடர்ந்து சூரியனில் இருந்து அனைத்து திசைகளிலும் வெளிப்படும் அதிவேக புயல். உலகின்மீது இவை தாக்காமல், பூமியின் புவிகாந்தப்புலம் முடிந்தமட்டிலும் தடுத்துவிடுகிறது. தாண்டி, வீரியம் குறையாமல் உள்ளே வரும் சூரிய காற்றே அரோரா (ஆராரொ இல்லை) போரியலிஸ், அரோரா ஆஸ்ட்ரலிஸ். துருவப் பிரதேசங்களில் நிகழும் இயற்கை புவி-மின்காந்த-சூரிய-ப்ளாஸ்மா சங்கம வாணவேடிக்கைகள்.

இது எதற்கு இப்போது என்றால், இவ்வகை மின்துகள் அடங்கிய பிளாஸ்மா எவ்வாறு புவிமின்காந்தப்புலனுடன் சங்கமிக்கிறது என்று வானியலாளார்கள் இன்றும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர். வர்சுவல் ரியாலிடியை வைத்து கணினியில் மாதிரித்து (மந்திரித்து போல மாதிரித்து) மின்துகள்கள் காந்தபுலனில் ஊடுருவி பயணிப்பது எப்படி என்று அனுமானிக்கின்றனர். புலன் இட மதிப்பில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டாலும் துகள் பாதை மாறி போய்விடும். முன்னர் கட்டுரையில் வண்னத்துப்பூச்சி விளைவு என்று எழுதினோம் நினைவிருக்கலாம். கேயாஸ் தியரியின், அதே மேட்டர்தான். இங்கும் நடக்கிறது. மின்துகள்களின் பாதை கேயாடிக்காக, தொடர்ந்து அனுமானிக்கமுடியாத குழப்பமாக, மாறும்முன் அவை வெளியில் (ஸ்பேசில்) பயணிக்கும் வளைகோடுகள் மோபியஸ் பட்டையாம். அருகில் படத்தில் பாருங்கள்.

மேலும், மோபியஸ் பட்டையான பாதை நடுவில் கிழிந்து இளைத்த, ஆனால் பெரிய மோபியஸ் பட்டையாகி, நாம் சிம்பிளாக காகிதத்தில் கட்டுரையில் மேலே செய்த பொருளைப்போலவே பாதைகளை கடந்து குழப்பமடைகிறதாம்.

solar-wind-mobius

அது எப்படிவேனா குழம்பட்டும், நமக்கு அதைப்பற்றி படித்தாலே குழம்பிவிடுகிறது என்கிறீர்களா, பரவாயில்லை. கட்டுரையில் இதுவரை என்னுடன் ஏக் தம்மில் தொடர்ந்து வந்திருந்தீர்கள் என்றால் நன்றி.

அறிவியல் மட்டுமல்ல, விஞ்ஞான புனைவு கதைகளிலும் மோபியஸ் பட்டை கிளப்பியுள்ளது. 1949இலேயே ஆர்தர் கிளர்க் தன் வால் ஆஃப் டார்க்னஸ் என்ற சிறுகதையில் மோபியஸ் பட்டையைபோல் ஆனால் முப்பரிமாணத்தில் இருக்கும் ஒரு உலகை எழுதினார். கதையில் தங்கள் உலகின் ஓரத்தில் படிக்கட்டு செய்து மேல் உலகிற்கு செல்லமுயன்று, படியில் ஏறி ஏறி மீண்டும் தங்கள் உலகிற்கே வந்துவிட்டிருப்பதை உணர்ந்து, வெறுத்துப்போய், படிக்கட்டை வெடிவைத்து தகர்த்துவிட்டு, நம் நிலை இதுதான் என்று மனம் சாந்தி அடைகின்றனர். அதேபோல ஏ. ஜே. டாயிஷ் எழுதிய மற்றொரு கதையில் போஸ்டன் நகரில் ரயில்பாதை அமைக்கையில், பல பாதைகள் குறுக்கே சென்று குழப்பம் ஏற்பட்டு, பாதை மோபியஸ் பட்டையாகி, டிக்கெட் வாங்கிக்கொண்டு உட்கார்ந்த ரயில் பக்கத்து ஸ்டேஷன் போகாமல் காணாமல்போய்…

அடுத்ததாக இசையில் மேலைநாட்டு சங்கீதத்தின் இரண்டு ஸ்வர கார்டுகளின் (2 note chords, இவற்றிற்கு டயாட், dyad, என்று பெயர்) வெளி ஒரு மோபியஸ் பட்டை (நம் இளையராஜா நிறைய டயாடுகள் உபயோகித்துள்ளார் – உதாரணம், பூந்தளிர் ஆட பாட்டின் கிட்டார் தொடக்கம்); எப்படி யோஹன் ஸெபாஸ்டியன் பா(ஹ்)க்கின் (J. S. Bach) மியூசிக்கல் ஆஃபரிங் எனப்படும் இசை கம்பொசிஷனில் ஒரு கெனானின் (canon – ஒரு இசைவடிவம்) ஸ்வரக்கோர்வைகள், தொடக்கம்-முடிவாய், முடிவே புரட்டி தொடக்கமாய், மோபியஸ் பட்டையில் எழுதக்கூடியவையாக இருக்கிறது…. இப்படி பட்டையை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். முத்தாய்ப்பாய் ஒரு விஷயம் கூறி முடிக்கிறேன்.

மோபியஸ் பட்டை மூன்றாவது பரிமாணத்தின் வழியாய் அரை முறுகல் செய்து, இரு பரிமாணத்தில் இருக்கும் வஸ்து. ஒரு படிமம் ஏற்றி, முப்பரிமாணத்தில் குழாய்போல் இருக்கும் கணப்பொருள் ஒன்றை முறுக்கி உள்ளே வெளியே வித்தியாசமில்லாதபடி அதன் ஓரப் பரப்புகளை சேர்த்தால் கிடைக்கும் பொருளின் முப்பரிமாண புரொஜெக்‌ஷன் (டோப்பாலஜியில், இம்மெர்ஷன் என்பார்கள்; லூசில் விடுவோம்) என்ன தெரியுமா. பெயர் க்ளைன் பாட்டில் (Klein Bottle).

அதாவது, அருகருகே இரண்டு மோபியஸ் பட்டைகளை வைத்து ஓரங்களை ஒட்டினால் (முடியாது) கிடைக்கும் வஸ்து, க்ளைன் பாட்டில் (Klein Bottle).

இதை வீட்டில், காகிதத்தில் செய்வது கடினம். இந்த முப்பரிமாண புரொஜெக்‌ஷன் எப்படி இருக்கும் என்று பார்க்க மென்பொருளைக்கொண்டு கணினியில் வரைந்த அபாரமான அனிமேஷன் இருக்கிறது.

YouTube சுட்டி

நிஜத்தில் இந்த பாட்டிலை ஆலையின் கிளாஸ் பிளோயிங் செக்‌ஷனில் கொடுத்து செய்யமுடியுமா? முடியும். இப்படி இருக்கும்.

klein-bottle

அக்மி க்ளைன் என்கிற கம்பெனி இதைசெய்கிறது. ஆர்டர் செய்தால் அன்றே டெலிவரியாம். உலகின் மிகப்பெரிய க்ளைன் பாட்டிலையும் (1.1 மீட்டர் உயரம்) அவர்களே செய்துள்ளனர். இதன் தொழில்நுட்பத்தை இந்த பக்கத்தில் படித்துப்பார்த்து வியந்துகொள்ளுங்கள்.

முடிக்கும் முன் கொசுறாக: கவனித்தீர்களோ, நம் தளத்தின் மேல் பேனர் படத்தில் இந்திய கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் இடம்பெற்றிருப்பது மோபியஸ் பட்டைதான். பக்கத்தில் க்ளைன் பாட்டில்.

எல்லாம் சரி, இவ்வகை க்ளைன் பாட்டிலில் ஊற்றி நீர் பருக முடியுமா? யோசித்துவையுங்கள். அடுத்த கட்டுரையில் (வேறு ஏதாவது விஷயம்) பார்ப்போம்.

14 பதில்கள் leave one →
  1. 2009 செப்டம்பர் 3

    வாவ். அருமையான கட்டுரை. நான் மாவு அரைக்க போன காலத்துல எனக்கும் டவுட் வந்தது. பட் ரீசன் தெரியல. பெல்ட் லூஸ் ஆ இருக்குமோ நெனச்சிட்டு இருந்தேன்.
    அல்மோஸ்ட் பதினஞ்சு வருஷம் கழிச்சு கரெக்ட் ரீசன் தெரிய வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் :-) .

  2. 2009 செப்டம்பர் 3
    என். சொக்கன் நிரந்தரத் தொடுப்பு

    அட்டகாசமான கட்டுரை – நன்றி அருண்.

    இங்கே பெங்களூரில் ஓர் ஐடி நிறுவனக் கட்டடத்துக்கு இந்தப் பெயர் வைத்திருந்தார்கள். அர்த்தம் தெரியாமலே பல நாள் அதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். எதேச்சையாக ஒருநாள் மதிய உணவு முடிந்து சும்மா சுற்றிக்கொண்டிருக்கையில், அங்கேயே ஒரு பலகையில் இந்தப் பெயருக்கான விளக்கம் போட்டிருந்தார்கள், அதை கூகுளில் தேடிப் படித்து வாய் பிளந்தேன் – உங்கள் கட்டுரை இன்னும் எளிமையாக விளக்கியிருக்கிறது. பாராட்டுகள்!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

  3. 2009 செப்டம்பர் 3

    ஆர்வத்தைத் தூண்டும் அறிவியல் கட்டுரை. இவ்வாறு மக்களிடேயே புழக்கத்தில் உள்ளவற்றைக் கூறி அறிவியலை விளக்குதல் நல்லதோர் உத்தி.

  4. 2009 செப்டம்பர் 4

    moorthi, என். சொக்கன், சிவக்குமார்: வருகை மற்றும் வாசிப்பிற்கு நன்றி.

    moorthi: எனக்கும் சில வருடங்களுக்குப் பிறகுதான் பெல்ட் விஷயம் புரிந்தது.

    என். சொக்கன்: (மோபியஸ் பட்டையின் குணத்தை முன்னிட்டு) நீங்கள் குறிப்பிடும் பில்டிங்கை விட்டு வெளியே வர முடிந்ததா? ;)

  5. 2009 செப்டம்பர் 4

    நல்லதொரு கட்டுரை நண்பா!!

    நாங்கூட மாவு ஆலைக்கெல்லாம் போய் ”டவுசர் பணம்” (அதான் Pocket Money) அடிச்சது உண்டு. அப்பல்லாம் ஏதோ போனோமா, அறச்சோமா, காச அடிச்சோமானு கருமமே கண்ணா இருந்துட்டேன். இருந்தாலும் பாத்தத ஒரு எடத்துல use பண்ணாம இல்ல – 24 inch இடுப்புக்கு 42 inch பெல்ட வாங்கிவிட்டு, ஒன்றரை முறை இடுப்பை சுற்றுவதை பார்த்து என்னடா செய்யலாம்னு யோசிக்கும் போது, அட நம்ம மாவு machineல போட்ட மாறி சுத்தி சுத்தி விட்டா ஒரே சுத்துல போடலாம்னு போட்டது நினைவு வருது!

    அது போர்து வுடு!

    ஆமாம் இந்த மோபியஸ் பட்டை பட்டைய கிளப்புதுனா, எல்ல எடத்துலேயும் அதை உபயோகிக்காத காரணம் என்ன? எல்லாமே எல்லா எடத்திலயும் உபயோகம் ஆகுமாடா மடயானு குதர்க்கமா பதில் சொல்ல கூடாது :-)

    In other words, wear and tear குறச்சலா இருந்தாலும் இதை உபயோகிப்பதால ஏதாவது disadvantge இருக்கா? எங்க உபயோகிக்க கூடாது – அத பத்தி எழுதலாமா? :-)

    பணிவன்புடன்
    ஸ்ரீராம்

  6. 2009 செப்டம்பர் 4

    Good one..Thanks!!

  7. 2009 செப்டம்பர் 8

    Excellent article! very interesting.

  8. 2009 செப்டம்பர் 9

    டிரைவ் பெல்ட்டுகளை இவ்விதம் போடுவது சுழற்சியின் திசையைத் திருப்பவே என்பது என் அடிப்படை புரிதல். இது புதிது.

    மிக்சிகள் வந்ததும் மாவு மிஷின்கள் வழக்கொழிந்து போய் விட்டனவே!

    http://kgjawarlal.wordpress.com

  9. 2009 செப்டம்பர் 14

    சார்,ஜவஹர் சொன்னது போல மாவு அரைக்கும் இயந்திரத்தின் சுழற்சியை மாற்றுவதற்காகத்தான் இப்படி குறுக்காக(CROSS BELT)போடப்படுகிறது.
    மற்றபடி எனக்கும் அறிவியலுக்கும் உள்ளதூரம் மிக அதிகம்.நான் மாவுமில் வைத்து இருப்பதால் இந்த தகவலைத்தருகிறேன்.

  10. 2009 செப்டம்பர் 27

    படிக்க சந்தோஷமாக இருந்தது. ஸயின்ஸ் பிக்ஷனில் மோபியஸ் பட்டை குறித்து சொன்னீர்கள். நான் இந்த பட்டையை முதன் முதலில் சந்தித்தது ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் சயின்ஸ் டுடேயில் 1980களின் இறுதியில் எழுதிய ஒரு அறிவியல் சிறுகதையில். அடிப்படையாக மூலக்கூறுகளிலிருந்து மோபியஸ் ஸ்ட்ரிப்பின் இயூக்ளீடியனல்லாத ஜியோமிதியை அதி பரிணாமங்களில் எப்படியோ பயன்படுத்தி உலகின் எல்லா பொருட்களுக்கும் அதன் கண்ணாடி பிரதிபலிப்பை உண்மையாக்கிவிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கிவிடுவார். பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற விநாயகர் சிலையின் பிரதியை அப்படி உருவாக்குவார். வலது பக்கம் இதயம் துடிக்க மனிதர்களின் பிரதிகளை உருவாக்குவார். மோபியஸ் பட்டையில் வலது கையை தூக்கியபடி இரு பரிமாண மனிதனின் படத்தை நகர்த்திக்கொண்டே போனால் அதே நிலையில் பார்க்கும் போது அவன் இடது கையை உயர்த்தியபடி இருப்பான், இந்த படமும் அதில் வந்தது. இறுதியில் அந்த விஞ்ஞானியின் வலது இடதுமூளைகளில் பிரச்சனை ஏற்பட்டு வழக்கம் போல எல்லாம் காணாமல் போய்விடும்.

  11. 2009 செப்டம்பர் 27

    ha i just remembered the title of that science fiction short story: “The Rare Idol of Ganesha”

  12. 2009 அக்டோபர் 12

    கட்டுரை நன்றாக இருந்தது. எழுபதுகளில் கிழக்கு கரொலினாவில் காரி அண்டெர்ஸன் என்ற 23 வயது கல்லூரி மாணவன் உருவாக்கிய “ரீஸைக்லிங்க் ஸிம்பல்” மோபியஸ் பட்டையே என்று வலைதளத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

  13. 2009 December 31

    மோபியஸ் பட்டை பற்றி நான் ஏதாவது படிப்பது, இந்த வருடத்தில் (2009 – இன்னும் எங்களுக்கு 10 மணி நேரம் இருக்கிறது, குவைத்தில்) நான்காவது முறை.

    முதலில் படித்தது ஒரு சுஜாதா கட்டுரையில். கூடவே மோபியஸ் சித்தாந்தத்தில் ஒரு கதையும் எழுதியிருந்தார்.

    என் தம்பி இந்த சித்தாந்தம் தெரியாமலே ஒரு கதை எழுதி அதை நான் படித்தது, சு. கட்டுரை படித்த மூன்றாம் நாள்.

    பின்னர் இன்னும் கொஞ்சம் படித்ததில் விகிபீடியாவில். இப்போது இங்கு.

    மோபியஸ் என்ற பெயர், பங்கு மார்க்கெட்டில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு வெகு பழக்கமானது.

    மோபியஸ் என் வாழ்க்கையில் இத்தனை முறை இடருவதற்கு ஏதாவது பட்டர்ஃப்ளை சம்பந்தம் இருக்குமா என்று யோசிக்கிறேன்.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS