காரைக்குடியில் அறிவியல் கருத்தரங்கம்
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக வெள்ளிவிழா ஆண்டையொட்டி தமிழக அறிவியல் பேரவை நடத்தும் ஒன்பதாம் கருத்தரங்கம் வரும் செப்டம்பர் 11, 12, 13 முதலிய நாட்களில் நடக்க உள்ளது. தொடர்பான அறிவிப்பு மடலை கீழே கொடுத்துள்ளேன்.
தமிழில் எழுதவல்ல அறிவியல் அறிஞர்களை முன்னிருத்த, தமிழ் வழி அறிவியல் கருத்துக்களை எண்ண, எழுத, பரப்ப மேற்கொள்ளப் பெற்ற இனிய முயற்சி இது என்று கருத்தரங்கின் நோக்கம் பற்றி மடலில் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழகத்தின் சக்தி வளம் என்பது கருத்தரங்கின் மையக்கருத்து. கூடவே அறிவியல் உபதுறைகள் பலதிலும் மட்டுமல்லாமல், சார்ந்த துறைகளான வானியல் முதல் வங்கியியல் வரை எதிலும் ஆராய்ச்சி கட்டுரைகள் (தமிழில் எழுதி) சமர்பிக்குமாறு வேண்டியுள்ளனர்.
படித்தவுடன் மனதில் தோன்றியது, ஆஹா! நல்ல முயற்சி.
இதைப் பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருக்கிறது.
[படத்தை க்ளிக்கினால், அறிவிப்பு மடல் பிடிஃப் கோப்பாக இறக்கிக்கொள்ளலாம்]
ஓரளவிற்கு புரிந்துகொள்ளப்பட்டு, புத்தகங்களில் வந்துவிட்ட அறிவியலை அன்றாட தமிழில் எளியமுறையில் விளக்க முற்படுவது ஒரு நோக்கம். இதற்கு முடிவே இல்லை. முடிக்க, நூற்றாண்டுகள் பிடிக்கும். அதே சமயம், தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சிகளையும் உடனுக்குடன் தமிழிலேயே நேரடியாக சொன்னால், எழுதினால், தமிழ் பொதுமக்களை சென்றடைகிறதா என்றும் தெரியவேண்டும். தமிழிலேயே கற்க, கற்பிக்க, என்றாவது இருப்பதையும் செய்வதயும் சேர்க்கவேண்டும் இல்லையா.
இதற்காக துணிந்து ஒரு விஷயம் செய்தோம் (சரியாக வருமா என்ற பயம் இன்னமும் நாக்கை உலரவைத்துக்கொண்டுள்ளது). என் நண்பரும் பேராசிரியருமான சத்யா சக்கரவர்தியும், அவருடன் தற்போது ஆராய்ச்சி செய்யும் மாணவர் பாலாஜி அவர்களும் சேர்ந்து வான்விண் பொறியியல் துறையில் (யேரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) இந்த கருத்தருங்கத்திற்கு ஒரு ஆராய்ச்சி கட்டுரையின் நீட்டிக்கப்பட்ட உரைச்சுருக்கம் எழுதி சமர்ப்பித்துள்ளனர். அடியேனும் ஒன்று உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் (இது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜியின் கலவியல்) சமர்ப்பித்துள்ளேன்.
எக்ஸ்டென்டெட் அப்ஸ்ட்ராக்ட் என்பதே நீட்டிக்கப்பட்ட உரைச்சுருக்கம். இதுவே மொத்த ஆராய்ச்சி கட்டுரை இல்லை. ஆராய்ச்சியில் எதைப்பற்றி மாநாட்டில் கட்டுரை வாசிக்க அல்லது கலந்தாலோசிக்கப்போகிறீர்கள் என்பது பற்றி இரண்டு மூன்று பக்கங்களுக்கு மிகாமல், அதேசமயம் ஆராய்ச்சியின் சுவாரசியமான தீர்வுகளை குறிப்பிட்டும் எழுதும் அறிமுக வடிவம்.
அடுத்த இரண்டு பதிவுகளில் நாங்கள் சமர்ப்பித்துள்ள இரண்டு உரைசுருக்கத்தையும் தருகிறேன்.
எங்களின் பணிசார்ந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதி இவை. ஆங்கிலத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக துறைவல்லுநர்களால் அருதியிடப்பட்டு ஆராய்ச்சி சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படும் ஆராய்ச்சியின் தமிழ் வடிவம். சுடச் சுட, தமிழில், இந்த தளத்தின் வழியாக உங்களையும் வந்தடைகிறது.
வாசகர்களான உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: இந்த உரைச் சுருக்கங்களை படித்தவுடன், மொத்தமாக இல்லையெனினும், கிட்டத்தட்ட ஆராய்ச்சி என்ன என்பதுவரை புரிகிறதா என்று பாருங்கள். எங்கு புரியவில்லை என்று பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள். முடிந்த வரையில் பதிலளிக்கிறோம்.
நிச்சயம் உங்கள் கருத்துக்கள், முழு கட்டுரையை தமிழில் எழுதுகையில் எளிமையாக்க எங்களுக்கு பயனளிக்கும். முழுக்கட்டுரையயும், சமர்ப்பித்தவுடன், இங்கு தருவதாகவே உள்ளோம்.
நீட்டிக்கப்பட்ட ஆராய்ச்சியுரை சுருக்கம்




நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
ரவி: நன்றி.
மிகக் கடினமான ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளீர். வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.