வலையில் அறிவியல் விளக்கங்கள் எழுதுவது வீண்?

2009 ஆகஸ்ட் 3

அறிவியல் பற்றி அதை உருவாக்கும் அல்லது பயன்படுத்தும் அறிவியலாலர்களும், தன்ஆர்வலர்களும், சாமான்யர்களுக்கு நிறைய சொல்லவேண்டும் என்று நமக்கு பொது எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி செய்ய முன்வராதபோதோ அல்லது அவ்வகை முயற்சிகள் நமக்கு சரியாக பலனளிக்காதபோதோ கோபப்படுகிறோம். பல வேளைகளில், கண்மூடித்தனமாக. முக்கியமாக தாய்மொழியில் அறிவியலை முழுவதுமாக பழகிக்கொண்டால் அதை பயமின்றி கற்பது எளிது என்றும் நினைக்கிறோம். பல விவாதங்களில் இவ்வகை கருத்துக்களை முன்வைக்கிறோம்.

சார்பாக ஒரு விஷயத்தை மட்டும் இங்கு யோசிப்போம். வலை (இன்டெர்நெட்) பண்டிதனையும் பாமரனையும் பாரபட்சமின்றி எளிதில் தொடர்பு செய்ய வல்லது, சாகா வரம் பெற்றது. அதனால் அது நிச்சயம் புதுமுறையில், எளிதாக அறிவியலை வளர்க்க வல்லது என்று விவாதங்களை படித்து, கேட்டு இருக்கிறோம். இது சரியா? நடைமுறையில் சாத்தியமா? இந்தியாவிலுமா?

இந்தியாவில் அறிவியலை வளர்க்க வலை(தான்) சிறந்த ஊடகமா?


மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் உடனே ஆம் என்று பதில்கூறியிருப்பேன். இதென்ன அபத்த கேள்வி என்று கிண்டலாடியிருப்பேன். சென்றவாரம் ஒரு புள்ளியியல் ஆய்வை பார்ப்பதற்கு முன்.

கீழே உள்ள விவரம் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகதெமியின் 2004இல் பொதுமக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பினைக்கொண்டு எழுதிய ஆய்வுகட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது (மொத்த கட்டுரையும் சுட்டி [1]ல் தரவு செய்துகொள்ளலாம்).

கருத்துக்கணிப்பில் சந்தேகம் வேண்டாம். ஏழை, ஏழையல்லாதோர், படித்தவர், படிப்பை அண்டாதோர், கிராமவாசி, பிறஇடவாசி, ஆண், பெண், மற்றவர் என அனைத்து இந்திய சாமான்யதரப்பினரின் அபிப்பிராயமும் உள்ளடக்கப்பெற்றுள்ள கணிப்பு.

என்ன கூறுகிறது?

ind-sci-survey-2004-4

முதல் படம், எவ்வகை ஊடகங்களில் உங்களுக்கு நம்பகத்தன்மை மிகுதி (தல, எதுல சொன்னா நீ ஒத்துப்ப) என்ற கேள்விக்கு இந்திய மக்களின் பதில். மெரும்பான்மையான வாக்குவித்தியாசத்தில் (70% மக்கள் நம்புகிறார்கள்) முதலில் வருவது தொலைக்காட்சி. அடுத்தது ரேடியோ மற்றும் நாளிதழ்கள். வலை சுத்தமாக டெபாஸிட் இழந்து 5 சதவிகிதத்திற்கும் கீழான மக்களே நம்பத்தகுந்தது என்று வருகிறது. ஆனால் ஒன்று. வலையின் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை என்றுதான் பெரும்பான்மையினர் கூறியுள்ளனர் (படத்தில் சிவப்பு பட்டையின் உயரம்).

இரண்டாவது படம் எந்த ஊடகத்தில் இருந்து நீங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விஷையங்களை தெரிந்துகொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு இந்திய மக்கள் கூறியிருக்கும் பதில். இங்கும் தொலைக்காட்சியே முன்னணி. ரேடியோ, நண்பர்கள், நாளிதழ்கள் என்று மற்ற விஷய (வம்பு?) ஊற்றுகளில் உள்ள நம்பிக்கை வலையிடம் மக்களுக்கு இல்லை. போனால் போகட்டும் என்று சிலர் புத்தகங்களில் இருந்து அறிவியல் தெரிந்துகொள்கிறார்கள். வலையை சுத்தமாக காணோம். இன்னபிற (others) என்ற இடத்தில் மறைந்திருக்கிறது எனவேண்டுமானால் மீசையில் மண்ணொட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.

இந்த கருத்துகணிப்பு ஏன் இவ்வாறு முடிவுகளை கொடுத்திருக்கிறது என்று அனுமானிக்கலாம். உதாரணத்திற்கு, இந்திய மக்கள் பெரும்பான்மையினர் வீட்டிலோ வேலையிடத்திலோ வலை தொடர்புடைய கணினி வசதி இல்லாதவர் என்று கூறலாம். உண்மையாகவும் இருக்கலாம். தீர்வாக அடுத்த தேர்தலில் இலவசமாக வலை தொடர்புடைய கணினியும், உபரியாக அடிக்கடி செத்துப்போகாத வலை தொடர்ப்பும் (கூடவே பாக்கெட்டில் இலவச மின்சாரமும்) தருவதாக வாக்குறுதி அளிக்கலாம. பிறகு நிறைவேற்றவும் செய்யலாம்.

கணினி, வலை தொடர்பு, என்பதெல்லாம் தீர்வின் ஒரு பகுதிதான். வேடிக்கை (அல்லது வேதனை) என்னவென்றால், இதுநாள்வரை மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரை இலவசமாக வலையிலேயே இருக்கிறது. தேவையானவர், அதாவது பொதுமக்கள் (எழுதும் நான் உட்பட) கண்களில் போதியமட்டும் படாமல். இது ஒருவகை அத்தாட்சி. வலையை அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கு இந்தியர்கள் பயன்படுத்துவது சொற்பமோ என்ற எண்ணம் நிலைபெற. மேலும் விவாதிக்கலாம். வேறு கட்டுரையில் விரிவாக செய்வோம்.

கருத்துகணிப்பு 2004இல் எடுத்ததுதான். 2009திற்குள் நிலைமை தலைகீழ் என்றால் அது உடான்ஸ். சற்று மாறியிருக்கலாம். எனக்கென்னவோ இந்தியாவில் வலையலகு என்பது சமுதாயத்தில் ஏதோவகையில் அருதியிட்ட ஒரு மேட்டுதரப்பு குறைந்த சதவிகிதத்தினர் மட்டும் உபையோகப்படுத்தும் ஊடகம் என்று தோன்றுகிறது. இந்த குறைந்த சதவிகிதத்திலும் குறைவான ஒரு குட்டி சதவிகிதமே அறிவியல் படிப்பதற்கு இல்லை மேய்வதற்கு வலையை உபயோகிக்கிறார்கள்.

இந்த நிலைமை இதோ அடுத்த சில வருடங்களில் மாறிவிடும் என்று எனக்கும் நம்ப ஆசை.

கட்டுரை சுட்டிகள்

[1] ஆதாரம்: 2004 Indian Science Survey Report – மொத்த ரிப்போர்டும் pdf கோப்பாக Indian National Science Academy வலைதளத்தில் இருக்கிறது.

13 பதில்கள் leave one →
  1. 2009 ஆகஸ்ட் 4

    உங்க்ளுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் பரவாயில்லை, தொடர்ந்து எழுதுங்கள். நானும், என்னால் என் நண்பர்களும் தொடர்ந்து படித்துவருகிறோம்.

    அவர்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்களே!

    • 2009 ஆகஸ்ட் 4

      Yokesvaran: எழுதுவதாகத்தான் உத்தேசம். படிப்பதற்கும் நன்றி.

      ஆனால் வலை ஊடகத்தை வைத்து இந்தியாவில் தற்போதைக்கு பெரிதாக அறிவியல் மாற்றத்தை உண்டாக்குவது மிகக்கடினம் என்பது அதிர்ச்சிதான். பார்ப்போம்.

      • 2009 ஆகஸ்ட் 4

        புள்ளிவிவரவியல்படி, இது சரியானதாகவே இருக்கும். மிகச்சிலருக்கு இணையம் கிடைக்கிறது. சாம்பிள் ஸ்பேஸில், இணையம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். தனக்கு என்ன என்றே தெரியாத நிலையில் அந்த ஊடகத்தை யாரும் நம்புவது சாத்தியம் இல்லை. அதனால் வலைத்தளங்களை நம்புவது இல்லை என்று அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

        என்றாலும் நாம் ஊதுகிற சங்கை தொடர்ந்து ஊதிக்கொண்டே இருப்போம்.

  2. 2009 ஆகஸ்ட் 5

    தொடர்ந்து எழுதுங்கள்.வலைப்பதிவின் மூலமாக தமிழில் அறிவியலை வளர்த்ததற்கு எதிர் காலத்தில் உங்களுக்கு நிச்சியம் பரிசு கிடைக்கும்.எந்த நல்ல முயற்சியும் வீணாகாது.

  3. 2009 ஆகஸ்ட் 8

    எனக்கு தெரிந்த வகையில், பள்ளி குழந்தைகள், அறிவியல் மாணவர்கள், ஆராய்ட்சியாளர்கள் முதல் என்னை போன்ற சாதாரண அறிவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு கூட இணையம் ஒரு வரப்பிரசாதம். நாளுக்கு நாள் இணையதளத்தை உபயோகிப்போர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே தொடர்ந்து எழுதுங்கள். அதுவும் தமிழில் அறிவியல் கருத்துக்களை இணைத்ததில் அளிப்பது மிகவும் வரவேற்க்க தக்கது. எனது மனமார்ந்த நன்றி.

  4. 2009 ஆகஸ்ட் 10

    Bhaskar, SKSAMY: கருத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுவதாகத்தான் முடிப்பு. பத்ரி சொல்வதுபோல், படிப்பவர் படிக்கட்டும்.

  5. 2009 ஆகஸ்ட் 13
    பழனிக்குமார் நிரந்தரத் தொடுப்பு

    இந்த புள்ளியல் ஆய்வு சற்றே அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் இதில் என் கண்ணில் பட்ட ஓரிரு விசயங்கள்..

    1. வலையை “தலைல இடியே விழுந்தாலும் நம்ப மாட்டேன்” என்று உரைப்பவர்கள் வெறும் 5சதவிகிதம், 90% மக்கள் மதில் மேல் நிற்கும் பூனைதான். (இது நீங்களும் கவனித்து குறிப்பிட்டது தான்). என்றாலும் அவ்வாய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள மற்றோர் விசயம், 95விழுக்காடு மக்கள் இணையத்தை உபயோகித்ததே இல்லையாம்! (அதிலும் 0.5% மக்களே தினசரி உபயோகிப்பவர்களாம் – இவை 2004ல்). இவ்வாறு என்றால், நம்புவோர் 5%, உபயோகிப்போரும் 5%, எனவே, “உபயோகிப்போர் அனைவரும் நம்புவோர்” எனக் கொள்ளலாமோ??

    2. பொழுது போக்கு, செய்திகள், அரசியல் இவற்றோடு ஒப்பிடுகையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு ஆறாவது (கடைசி :( ..) இடமே. இது மக்களுக்கு அறிவியலில் உள்ள மிக அதிகப்படியான ஆர்வமின்மையைக் காட்டுகிறது. பொழுது போக்கிற்கே முதலிடம் எனும் பொழுது தொலைக்காட்சி, வலையை விட முன்னுரிமை பெற்று இருப்பது ஆச்சரியமல்ல.

    மேலும் பல புள்ளி விவரங்கள் இவ்வகையான ஆர்வமின்மையையே குறிப்பிடுவனவாக இருக்கின்றன. வலையில் மட்டுமல்ல, எவ்விடத்திலும், யாதொரு விசயத்திலும் நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து போதிதால், ஆர்வம் விரிவடையும். அடுத்த சில வருடங்களில் இந்த நிலைமை மாறிவிடும் என்று நம்ப “ஆசை”ப்படுவதோடு நிறுத்த வேண்டாம்..தாராளமாக நம்பவும் செய்யலாம்.

    • 2009 ஆகஸ்ட் 14
      பழனிக்குமார் நிரந்தரத் தொடுப்பு

      ஒரு சிலேடைக்காக கேட்கத் தோன்றுகிறது.

      வலையை நம்புவதால் அவர் வலையில் விழுந்தவரோ, அல்லது, வலையில் விழுந்ததால் அவர் வலையை நம்புகிறாரோ..???

      ;)

  6. 2009 ஆகஸ்ட் 18

    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே!
    வலை பயன்பாடு இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

    அருளானந்த்
    சென்னை

  7. 2009 ஆகஸ்ட் 22

    சிறுவயதில் என் சி பி எச் புத்தக நிறுவனத்தில், பெரெல்மான் எழுதிய பொழுதுபோக்கு பௌதீகம், பெ.நா. அப்புசாமி மொழிபெயர்ப்பில் அறிவியல் வரலாறு, கண்ணன் இதழில் வெளிவந்த நீங்களே ட்ரான்சிஸ்டர்ரேடியோ செய்யலாம் முதலாக, சின்னச் சின்ன அறிவியல் கட்டுரைகள், கலைக் கதிர் இப்படித் தமிழில் அறிவியலைப் படித்து வளர்ந்த அனுபவம் என்னுடையது. வாய்ப்புக்கள் கொஞ்சமாக இருந்தபோதுமே கூட, இப்படித் தமிழில் அறிவியலைச் சொல்கிற முயற்சி இருந்துகொண்டேதான் இருக்கிறது.

    இந்தப் பக்கங்கள் நீண்ட நாள் புதுப்பிக்கப் படாமல் இருந்ததை, அவ்வப்போது வந்து பார்த்து ஏமாற்றத்தோடு செல்வதும் உண்டு. எத்தனைபேர், உடனடியாகப் பயன்படுத்துகிறார்கள், படிக்கிறார்கள் என்ற விசாரத்தை விட்டு, உங்களால் முடிந்த வரை, சொல்ல முடிந்தவரை, முயற்சியைத் தொடருங்கள்.

    வாழ்த்துக்கள்.

  8. 2009 ஆகஸ்ட் 24

    பழனிகுமார்: ஆமாம்; அறிவியலை சீரியசாக்கி, அன்றாட அனுபவங்களில் இருந்து கழட்டி எங்கோ வானில் உறையும் மகர்க்கு என்று போதிப்பதால்தான் அநேகர் அதிவிரைவில் அதிலிருந்து அப்ஸ்காண்டாகி விடுகிறார்கள். மேலும், அறிவியலை ஜீவனத்திற்காக, ஒரு 9 டு 5 வேலையாய் செய்தால் பலனளிக்காது. இதெல்லாம் பலருக்கு தெரிந்ததுதான்.

    அருளானந்த்: இன்றுவரை எழுதுவதாகத்தான் உத்தேசம்.

    கிருஷ்ணமூர்த்தி: யா. ரா. பெரல்மானை யாரே மறக்க முடியும்? கருத்துக்களுக்கு நன்றி.

வரு தடங்களும் வரு பிங்குகளும்

  1. நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்? « அறிவியல்
  2. நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்? « அறிவியல்

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS